search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூறாவளி காற்று"

    • கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.
    • சாய்ந்த வாழைகளை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    இந்த சூறாவளி காற்றில் கடுகாம்பாளையம், தோட்டகாட்டூர், ஆலங்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழை,நேந்திரன், கதளி உள்ளிட்ட 500-க்கும் வாழை மரங்கள் சாய்ந்து சேதமானது.

    ஒரு வாழை நடவு செய்ய சுமார் 10 முதல் 150 ரூபாய் வரை செலவு செய்து இன்னும் சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறாவளி காற்றால் வாழைகள் சாய்ந்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    மேலும் சாய்ந்த வாழைகளை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடபட்ட வாழை மரங்களுக்கு காப்பீடு செய்து இருந்தும் காற்றினால் சாய்ந்த மரங்களுக்கு அரசு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில்லை எனவும், பெரும்பாலும் இயற்கை சீற்றத்தின் போது காற்றினால் வாழை மரங்கள் சேதம் ஆவதாகவும் அவ்வாறு காற்றினால் சேதம் அடைந்த வாழை மரங்களுக்கும் காப்பீட்டு தொகையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நேற்று மாலை குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன்மழை பெய்தது.
    • மரங்கள் முறிந்து மின்கம்பத்தில் சாய்ந்ததால் பல்வேறு ழுலு பல இடங்களில் மின்கம்பம் உடைந்தது இதனால் மின்தடை ஏற்பட்டது

    கடலூர்:

    கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் கடலூர் மாவட்டம் முழுதும் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன்மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இதில் நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இருந்தவேப்பமரம், தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் முறிந்து மின்கம்பத்தில் சாய்ந்ததால் பல்வேறு இடங்களில் மின்கம்பம் உடைந்தது இதனால் மின்தடை ஏற்பட்டது .

    இதே போல குறிஞ்சிப்பாடியை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில் மேச்சலில் இருந்த கறவை மாடு மீது மின்னல் தாக்கியது. அதில் சம்பவ இடத்திலேயே அந்த மாடு உயிரிழந்தது. இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர் மூதாட்டி லட்சுமி என்பவர் கதறி அழுதது பலரையும் சோகத்தில் அழுத்தியது. சூறாவளிக்காற்று மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த மழை போன்றவற்றால் சற்று குளுமையான சூழல் நிலவியது.

    • இரவு 9 மணி முதல் 10 மணி வரை 1 மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
    • பவானி சாலை முருகன் கிணறு அருகில் சாலையோரம் இருந்த ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலை யில் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

    சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை 1 மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    இதேபோல் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்தியூர்-பவானி சாலை முருகன் கிணறு அருகில் சாலையோரம் இருந்த ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.

    இதனையடுத்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    மேலும் அந்தியூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றின் காரணமாக மின்தடையும் ஏற்பட்டது. பர்கூர் மலைப்பகுதியில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் பர்கூர் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • 5000 கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தது.
    • ரூ. 10 லட்சம் மதிப்பிலான கோழிப்பண்ணை முற்றிலும் சேதமானது .

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சாமராயப்பட்டி, பாப்பான்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் சாமராயப்பட்டி கிராமத்தில் விவசாயி சபரிஸ்வரன் என்பவருக்கு சொந்தமான 350 அடி நீளம் உள்ள கோழிப்பண்ணை பலத்த சேதம் அடைந்தது. மேலும் சூறாவளி காற்றால் கோழிப் பண்ணையின் மேற்கூரைகள் சுமார் 200 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டது .கோழி பண்ணையில் வளர்த்து வந்த சுமார் 5000 கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- சாமராயபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் இது வரை பார்க்காத வண்ணம் சூறாவளி காற்றுடன் திடீரென மழை பெய்தது. விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். ரூ. 10 லட்சம் மதிப்பிலான கோழிப்பண்ணை முற்றிலும் சேதமானது .ஆயிரக்கணக்கான கோழிகளும் பரிதாபமாக உயிரிழந்தன . ஆகையால் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் சூறாவளி காற்றால் சேதமான வீடுகள் மற்றும் கோழிப்பண்ணைக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    • மணப்பாறை அருகே சூறாவளி காற்றில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன
    • தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. மரவனூர், பாலப்பட்டி பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக சூறாவளிக் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மேற்கூரைகள் காற்றில் பறந்தது. சில இடங்களில் மரங்களும் சாய்ந்தது.இந்நிலையில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பட்டி பிரிவு சாலையோரத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்த ஒரு மின்கம்பம் பாதி சாய்ந்தது.இதனால் மின்கம்பிகள் கீழே தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. பின்னர் தகவல் அறிந்த மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை நிறுத்தி விட்டு மின்கம்பிகளை அப்புறப்படுத்தினர். பின்னர் வாகனங்கள் வழக்கமாக இயக்கப்பட்டது. மேலும் அணைக்கருப்ப கோவில்பட்டி அருகே பனைமரத்தின் மீது மின்னல் தாக்கியதில் திடீரென மரம் தீ பற்றி எரிய ஆரம்பித்தது.சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எரிந்த தீயால் மரம் கருகியது. இதே போல் துவரங்குறிச்சியை அடுத்த தெத்தூர் பகுதியில் வீசிய பலத்த காற்றால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டுள்ளது.

    • சூறாவளி காற்றால் 10க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.
    • வீட்டுமனை சுற்றுச்சுவா் சுமாா் 200 மீட்டா் தூரத்திற்கு முழுமையாக இடிந்து விழுந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். வீடுகளுக்கு அருகே தனியாா் வீட்டுமனை அமைத்து அதைச் சுற்றி சுற்றுச்சுவா் கட்டியுள்ளனா். இந்நிலையில் இப்பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதில் வீட்டுமனை சுற்றுச்சுவா் சுமாா் 200 மீட்டா் தூரத்திற்கு முழுமையாக இடிந்து விழுந்தது. இதில் அருகே இருந்த முத்தம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டின் மீது சுவா் விழுந்ததில் வீடும் முழுவதுமாக சேதமடைந்தது. இதில் அதிா்ஷ்டவசமாக மூதாட்டி உயிா் தப்பினாா். மேலும் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் 2 வீடுகள், 5 கழிப்பறைகள், 2 மாட்டு கொட்டகைகள் சேதமடைந்தன. மேலும் சூறாவளி காற்றால் 10க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன. இது பற்றி தகவலறிந்த பல்லடம் வட்டாட்சியா் ஜெய்சிங் சிவகுமாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டாா். 

    • மாண்டஸ் புயலின் மையப்பகுதியான கண் பகுதி மாமல்லபுரத்தின் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
    • காற்றின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில் மின்தடை ஏற்படும்

    விழுப்புரம்:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்புயல் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மாண்டஸ் புயலின் மையப் பகுதியான கண் பகுதி மாமல்லபுரத்தின் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இப்புயல் கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 65 முதல் 75 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும், சில இடங்களில் 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதனால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையொட்டி விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உள்ளாட்சி, பொதுப்பணி, மின்சாரம், வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கிழக்கு கடற்கரை சாலையில் சின்னமுதலியார்சாவடி, பெரியமுதலியார்சாவடி, பிள்ளைச்சாவடி, அனுமந்தை, கூனிமேடு, நடுக்குப்பம், கீழ்புத்துப்பட்டு, தந்திராயன்குப்பம், அழகன்குப்பம், வசங்குப்பம், கைப்பாணிக்குப்பம் ஆகிய 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் கடல் சீற்றத்தின் காரணமாக கடந்த 3 நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று மாலை முதலே இப்பகுதிகளில் மிதமான வேகத்தில் காற்று வீசத் துவங்கியது. இது படிப்படியாக அதி கரித்து இன்று காலை முதல் 30 கி.மீ., வேகத்தில் வீசி வருகிறது. இது படிப்படியாக உயரும் எனத் தெரிகிறது. வழக்கத்திற்கு மாறாக கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் தங்களது படகுகளை மேடான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இருப்பினும் பலத்த காற்றினால் கடல் சீற்றம் அதிகரித்து மேடான பகுதி வரை கடல் நீர் வருகிறது. இதனால் மீனவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

    மேலும், விழுப்புரம் மாவட்ட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மின்தடை உள்ளது. இன்று காலை 8 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. காற்றின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில் மின்தடை ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் ஒரு சில கிராமங்களில் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் கிழக்கு கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

    • பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேசுவரம், மண்படம் பகுதிகளில் மீன்பிடிப்பதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.
    • பாம்பன், ராமேசுவரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 1,500 படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம், மீன்வளம் மற்றும் மீளவர் நலத்துறை, (தெற்கு) உதவி இயக்குநர் ராஜதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையரின் மின்னஞ்சல் செய்தியில், மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கையில், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் காற்றின் வேகமானது மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே புதுமடம் முதல் ரோச்மா நகர் வரை பகுதிகளில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது மீன்பிடி கலன் மற்றும் மீன்பிடி உபகரணங்களை கரையில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லவும், விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது விசைப்படகுகளை இடைவெளி விட்டு, கடல் அலைகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் கடலில் நங்கூரமிடவும் மீனவர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர்கள், நாட்டுப்படகு, விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தலைவர்கள், மூக்கையூர் மீன்பிடி துறைமுக மேலாண்மைக் குழு ஆகியோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேசுவரம், மண்படம் பகுதிகளில் மீன்பிடிப்பதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் பாம்பன், ராமேசுவரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 1,500 படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • ராமேசுவரத்தில் சூறாவளி காற்று வீசியதால் மீனவர்கள் குடிசைகளுக்குள் கடல் நீர் புகுந்து சேதமடைந்துள்ளன.
    • இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ராமேசுவரம்

    பாக்ஜல சந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று கடந்த 2 நாட்களாக வீசி வருகிறது. இதனால் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் வடகடல் மற்றும் தென் கடல் பகுதிகளில் கரையோரங்களில் பலத்த அலையுடன் கூடிய காற்று வீசி வருகின்றன. கடற்கரையோரங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளை தாண்டி ராட்சத அலைகள் அடித்து வருகிறது. இதன் தாக்கமாக பாம்பன் வடக்கு பகுதியில் கடல் கரையோரங்களில் அமைந்துள்ள மீனவர்களின் குடிசைகளில் கடல் நீர் ஏறி கூரையால் அமைக்கப்பட்ட வேலிகள் சேதமடைந்தன.

    குடிசை வீட்டிற்குள்ளும் கடல் நீர் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கொடைக்கானலில் சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    பெருமாள்மலை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்ய வில்லை. இதனால் மலைப் பகுதியில் வறட்சி நிலவியது.

    குடிநீரை விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டது. இந்த ஆண்டு கோடை மழை கைகொடுத்ததால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    கடந்த சில நாட்களாகவே கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கொடைக்கானல் மற்றும் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் 12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு பகுதிக்கு இடையே ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது.

    இதனை வனத்துறையினர் விரைந்து வந்து அகற்றினர். மேலும் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

    பல இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை மின்சாரம் வரவில்லை. இதனால் விடிய விடிய இருளில் பொதுமக்கள் தவித்தனர்.

    இன்று காலையிலும் சில இடங்களில் மின்சாரம் வினியோகம் செய்யப்பட வில்லை. மேலும் ஒரு சில இடங்களில் மின்சாரம் வருவதும் உடனே தடைபடுவதுமாக இருந்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் முட்டைகோஸ், உருளைகிழங்கு, பட்டாணி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்ட விவசாயிகள் இந்த மழையால் அவை பாதிக்கப்படும் என்பதால் கவலையில் உள்ளனர்.

    ×